×

பாதுகாப்பு இல்லாமல் பாழாகும் ஆரோக்கியம்; தொழில் சார்ந்த நோய்களால் ஆண்டுதோறும் 20 லட்சம் தொழிலாளர்கள் மரணம்: புற்று நோயால் 32% பேர் உயிரிழப்பு

மே 1ம் தேதியான நேற்று தொழிலாளர்கள் தினம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தொழிற்சங்கங்கள், பொதுவுடமை அமைப்புகள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதுடன் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் தொழில்மயமாக்கல் நடவடிக்கையால் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்களின் பெருக்கம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் பெரு வெள்ளம், வறட்சி உள்ளிட்ட கால நிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இவை மனித ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்ைப ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அதிக வெப்பம், புறஊதா கதிர்வீச்சு, தீவிர வானிலை நிகழ்வுகள், காற்று மாசுபாடு ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது புற்றுநோய், இதயநோய், சுவாச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. இதன் தாக்கம் ெபாதுவாக இருந்தாலும், தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில் உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 28ம்தேதி ‘வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகதினம்’ அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டை (2024) பொறுத்தமட்டில், ‘மாறும் காலநிலையில் பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்’ என்பதை இலக்காக கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காலநிலை மாற்றத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களை, மருத்துவம் சார்ந்த சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வெளியிட்டு வருகின்றனர்.

நவீனங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தொழில் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நலமேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு மனிதன் செய்யும் வேலை காரணமாக, அவனுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளே, தொழில்சார்ந்த நோய்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்களானது உயிரியல், வேதியியல், உடல் மற்றும் உளவியல் காரணங்களால் ஏற்படுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி, டெர்மடிஸ் மற்றும் தசைக்கூட்டு கோளாறுகள் பொதுவான தொழில்சார் நோய்களாக கருதப்படுகிறது. இதே போல், தோல் கோளாறுகள், சுவாசநோய்கள், செவித்திறன் பிரச்னைகளும் அதிகளவில் உருவாகிறது. இதில், சமீபத்திய ஆண்டுகளை பொறுத்தவரை, மன அழுத்தத்தால் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடல் உழைப்பு அல்லாத பணிகளில் கூட, நிர்வாகிகள் தரும் அழுத்தமானது, பலருக்கு மனநலக் கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் தொழில்சார் நோய்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் தொழில் மயமான நாடுகளில், உலகளாவிய இறப்புகளில் 5முதல் 7சதவீதம் தொழில் காயங்களால் நிகழ்கிறது என்பது தெரியவந்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் மில்லியன் இறப்புகள், தொழிலுடன் தொடர்புடையதாக உள்ளது. அதில் 20 லட்சம் தொழிலாளர்கள் தொழில் சார்ந்த நோய்களால் இறக்கின்றனர். இதில், புற்றுநோய் என்பது பெரும் கொலையாளியாக உள்ளது. தொழிலுடன் தொடர்புடைய இறப்புகளில் 32 சதவீதம் புற்றுநோய் பாதிப்புகளால் தான் நிகழ்கிறது. இதுமட்டுமின்றி காற்றோட்ட நோய்களால் 23சதவீதமும், தொற்றக்கூடிய நோய்களால் 20சதவீதமும் இறப்புகள் நிகழ்ந்து வருகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தொழிலாளர்களும், தங்கள் வேலையால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு. ஒரு தொழிலாளியின் இழப்பு என்பது, அவரது குடும்பத்திற்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதியாகவும், மனது ரீதியாகவும் அவரது உறவுகள் நெருக்கடிகளை சந்திக்கிறது. அது மட்டுமன்றி, அர்ப்பணிப்பு மிக்க ஒரு தொழிலாளியின் இழப்பு என்பது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உற்பத்தி திறன் தடைபடுவதற்கும் காரணமாக அமைகிறது. இந்த வகையில், தொழில்சார்ந்த நோய்களால் இறப்பு என்பது தேசத்திற்கும் இழப்பாகவே உள்ளது. இதை உணர்ந்து சுகாதாரமான முறையில் பணிச்சூழலை உருவாக்கி, தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது, அரசுகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

சட்டங்கள் கூறுவது என்ன?
தொழில்சார் நோய் பாதுகாப்பு குறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில்,‘உலக தொழிலாளர்களில் 75 சதவீதம் பேர், மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அதில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாகவே உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, தொழிற்சாலைகள் சட்டம் (1948), சுரங்கத் தொழிலுக்கான சட்டம் (1952), கப்பல்துறை தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலச்சட்டம் (1986), கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் சட்டம்(1996), ஊழியர்களின் மாநில காப்பீட்டு சட்டம் (1948) என்று பல்வேறு சட்டங்கள் தொழிலாளர்களுக்கென உள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் சுகாதாரமான பணி பாதுகாப்பும், அதன் மூலம் அவர்களது ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையும் காக்கப்பட வேண்டும் என்பதே இந்த சட்டங்கள் உணர்த்தும் ெபாதுவான சாராம்சம்,’ என்கின்றனர்.

The post பாதுகாப்பு இல்லாமல் பாழாகும் ஆரோக்கியம்; தொழில் சார்ந்த நோய்களால் ஆண்டுதோறும் 20 லட்சம் தொழிலாளர்கள் மரணம்: புற்று நோயால் 32% பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Labor Day ,India ,
× RELATED இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்;...